இந்திய அரசின் சட்ட விதிகளை எதிர்த்து வாட்ஸ் அப் வழக்கு!'
அரசு அறிவித்த புதிய சட்ட விதிகளின்படி, பயனாளர்களின் தரவுகளை கண்காணித்து, சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்புவோரின் விவரங்களை உடனடியாக அரசுக்கு தெரிவிக்குமாறும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டது. இதற்காக ஓவ்வொரு நிறுவனமும் சமூக வலைத்தள குறைதீர்ப்பு அதிகாரி, தொடர்பு அதிகாரி, புகார்களை கவனித்து தீர்வு காணும் அதிகாரி, ஆதாரமற்ற, பொய்யான கருத்துகளை கண்காணித்து அதை நீக்குவதற்கான அதிகாரி என அதிகாரிகளை நியமித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த சட்ட விதிகளுக்கு உடன்பட்டாலும் எங்களுக்கு அதில் சில நிபந்தனைகள் இருப்பதால் அரசுடன் இணைந்து ஆலோசிக்கவும், அரசு அறிவித்த பொறுப்புகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்கும் ஆறு மாத காலம் கால அவகாசம் வேண்டும் என்று சில நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன. ஆனால், நிறுவனங்கள் கேட்ட கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து நிபந்தனைகளை பின்பற்றுமாறு அரசு கண்டிப்புடன் தெரிவித்தது. இந்நிலையில், அந்த காலக்கெடுவானது நேற்று (25.05.2021) செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் கூகுள், ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் இதனை ஏற்று தனது சேவையைத் தொடர்ந்து வருகிறது. ஆனால், வாட்ஸ் அப்பை பொறுத்தவரையில், தங்களது பயனாளர்களின் தரவுகளை பாதுகாக்க (End-to-End Encryption) முறையைக் கையாண்டு வருகிறது. ஆனால், அரசு தெரிவிப்பது போல் பயனர்களின் உரையாடலைக் கண்காணிப்பது அவர்களின் தனியுரிமையை பாதிக்கும் என்று தெரிவித்துள்ள வாட்ஸ்அப். இதனை ஏற்க மறுத்து இந்திய அரசின் சட்ட விதிகளை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்தியாவில் தனது அதிகளவிலான பயன்பாட்டாளர்கள் வைத்திருக்கும் வாட்ஸ்அப் இதுபோன்ற முடிவை எடுத்துள்ளது. இதற்கு அரசு என்ன மாதிரியான முடிவுகளை எடுக்கும் என்பதுதான் தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments
Post a Comment